Thursday, January 10, 2013

உரிமைக்குரல்

உரத்து ஒலிப்பவை
கண்டனக்குரல்கள் மட்டுமல்ல...
உரிமைக்குரலாக கூட இருக்கலாம்...

அன்பிற்குரியவர்களின்
கண்டனத்திற்கு
என்றேனும் நாம் காட்டும்
எதிர்ப்பு என்பது
எதிர்பாராத தாக்குதலுக்கு சமம்...

அந்த தாக்குதலில் காயங்கள்
இரண்டு பக்கமும்
என்பதில் மாற்றமில்லை...


காயங்களை விட தழும்புகளின் வேதனை
அதிகமாக இருக்கிறது..

முறிந்த எலும்பு
ஆறு மாதத்தில் ஊறி விடுகிறது
முறிந்த உறவுகள்
புகைந்து புகைந்து
 ஊதுகிறது

நினைவிருக்கட்டும்
உரத்து ஒலிப்பவை
கண்டனக்குரல்கள் மட்டுமல்ல...
உரிமைக்குரலாக கூட இருக்கலாம்...



 

Wednesday, January 2, 2013

வெட்க வேட்டை

எப்போதும் சிரிப்பும்
கும்மாளமும் நிறைந்தது
புது மண வாழ்க்கை...

காத்திருந்த பருவங்கள்
சிறகு முளைத்து பறக்கிறது...
வெட்கங்களை வேட்டையாடி
கொன்றுவிட்டோம் .

உன் ஒவ்வொரு
சிணுங்கலும் ஒவ்வொரு முனகலும்
தவம் இருந்தவனுக்கு 
கடவுள் அந்தஸ்தைக் கொடுக்கிறது.
 
கூட்டுக்குடும்பத்தில்
நம் உறவுகள்
நம்மை பார்க்கையில்
கண்களுக்குள் ஒரு திரையிட்டுக்கொள்கின்றனர்..
நாமும் அவர்கள் கடந்து போகையில்
நமது கண்களுக்குள்
திரையிட்டுக் கொள்கிறோம்..

குளித்து விட்டு போனது நீ..
தலை துவட்டிககொண்டிருப்பதேன்னவோ நான்.

பாலை பூனையும்
பூனையை பாலும்
கவர்ந்து அருந்த
காத்திருக்கும் திருட்டுத்தனத்தில் இருந்து
தொடங்குகிறது
நம் வாழ்விற்கான முதிர்ச்சி.