Wednesday, December 3, 2014

1.12.2014 குங்குமம் கவிதைக்காரர்கள் வீதி


பெண்டாட்டி தாலிய வித்துத் தா



வக்காடு தாத்தா மோட்டார் கிணத்துல தான் மோட்டார் ஓடும் போது வாய்க்கால்ல மடை கட்டி விளையாடுவோம் நானும் அற்புதராஜும்...குளிக்க மாட்டோம்

கரண்ட் மோட்டார் வரும் முன்ன உள்ள ஆயில் என்ஜின் மோட்டார் அது...

வேட்டிய மடிச்சி தார் பாய்ச்சிகிட்டு வக்காடு தாத்தா என்ஜின ஸ்டார்ட் பண்றதையே தேமேன்னு பாத்துகிட்டே இருப்போம்..

ஸ்டார்ட் பண்ணவும் மடை கட்டுற வேலைய தொடங்கிடுவோம்

ஒரு நாள் என்ஜின் மோட்டார் சவுண்டோட சேர்த்து
மொட்ட மண்டயன் சொட்ட மண்டயன்னு ரைமிங்கா சொல்லிப் பாத்தேன்...அற்புத பெருமாள் மொட்டை போட்ருந்தான்..

அவன்ட்டயும் சொன்னேன்
டேய் அற்பு..மோட்டார் சத்தத்த கேளேன்...
மொட்ட மண்டயன் சொட்ட மண்டயன்
மொட்ட மண்டயன் சொட்ட மண்டயன்னு சொல்லுதுடான்னு....

அவனுக்கு சுர்ர்ன்னு வந்துது கோபம்...

எனக்கு அப்டி கேக்கலடா...
ஓட்டப்பல்லன் தெத்துப்பல்லன்
ஓட்டப்பல்லன் தெத்துப்பல்லன்னு தான் எனக்கு கேக்குது என்றான்

எனக்கு சில நாட்களுக்கு முன்னாடி தான் பல் விழுந்திருந்தது,..

நான்
மொட்ட மண்டயன் சொட்ட மண்டயன்னு சொல்ல
அவன்
ஓட்டப்பல்லன் தெத்துப்பல்லன்னு சொல்ல

வக்காடு தாத்தா கவனிச்சிட்டார்

மோட்டார் சவுண்டு எப்டி இருக்கு தாத்தா என்றேன்

அதுக்கு அவரு...
அடேய்..இந்த மோட்டாரு கோளாறு பாக்க நான் செலவழிச்ச துட்டுக்கு கணக்கே கிடையாது...

என் காதுக்கு
உன் பெண்டாட்டி தாலிய வித்துத் தா
உன் பெண்டாட்டி தாலிய வித்துத் தா ன்னு தான் கேக்குது ன்னார்...

இப்போ எங்களுக்கும் அப்டித் தான் கேக்குது