Wednesday, November 27, 2013

செடியை விட்டு
பறிக்கும் போது
முட்கள் மட்டுமல்ல..
பூக்களும் குத்தத் தான் செய்கின்றன...

நமக்குத் தான் உறைப்பதில்லை!!

Monday, November 25, 2013


  • என் பார்வைக்கு
    அப்பால் போகும் முன்
    உன்னை மாயத்துக்கொள்வதேன்
    என்றேன்!

    உன் சுவாசத்தை சுமந்து
    உன் எல்லை வரை போவதே
    நிம்மதி என்றது நீர்க்குமிழி!

Sunday, November 24, 2013

அம்மாவாய் .....

இன்பத்தில்  தொடங்கி
தவத்தில் நடந்து
ஒரு அழுகையில் பிறந்தது
இந்த தொட்டில்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
என்று அழுகையை தான் குறிப்பிட்டிருப்பார்களோ ?

தூங்கும் பிள்ளைக்கு
வேடிக்கை காட்ட வரும்
தேவதைகளிடம்   மட்டும்
நாத்திகம் பேச பிடிக்கவில்லை!

அழுவது சுவசித்தலில் ஒரு பகுதியாமே...
இருந்துவிட்டு போகிறது...!

சிரிப்பது யாசித்தலாமே...
புரிந்து கொள்ள இயலவில்லை!!

கைகளை சிக்கென்று பொத்திக்கொள்ளும் பிள்ளை
கண்களை நுணுக்கி
சோம்பல் முறித்து
தாயின் வாசத்தையும்
மார்பின் நுனியையும்
அடையாளம் காணும் அறிவியல்...
உத்திரத்தையே  வெறித்துப் பார்க்கும் கண்கள்..
ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் அனுமதி கேளாத
சுதந்திரம்...
பெற்றோரை பிள்ளைகளாக்கும்
புன்னகை...


ஒன்றன் பின் ஒன்றாய்
தொடரும் சுவாரஸ்யங்களை   தனியே அனுபவித்து பின் 
உன்னை பிரிந்த என் கருவறையின் கண்ணீரை
மார்பு வழி துடைத்திடுவாய் பிள்ளாய்! 

கனவுக்கும் கண்களுக்கும்
சம்பந்தமே இல்லை
என நினைத்திருந்தேன் ....

ஒரு பயங்கர
கனவு கொடுத்த
கண்ணீர்
அந்த நினைப்பை
மாற்றிப்போட்டது 

Monday, July 22, 2013

விடி

மழை வருமென்றும்
வராதென்றும்
ஆருடம்  சொல்லி சொல்லியே
கழிந்தது அந்த சாயங்காலப்பொழுது!

காலில் விழுந்து
ஆசீர்வதித்துக்கொண்டிருந்தன அலைகள்....

காவலர்களும் சுண்டல்காரர்களும்
நெருங்க இயலாத அளவுக்கு
இருந்தது எங்களுக்கு இடையேயான
நீண்டதொரு இடைவெளி...

இந்த காதல்
என் இளமையை
விலைமகளும் விலகி செல்லும்
விதத்தில் வேற்றுக்கிரகத்தில்
வைத்து பாதுகாக்கிறது 

நான் குடையோடு
வந்திருப்பது தெரிந்து
கண்களை மூடிக்கொண்டது வானம்!

நான் துணையோடு
வந்திருப்பது தெரிந்து
பொறாமையில் ஓடிவிட்டது மேகம்...

இது போன்றதொரு தருணங்களில்
மனமும் அறிவும் போட்டி போட்டு
பார்வையாலே தின்று தீர்த்து விடுகிறது
என் உணர்வு!

உனக்கும் அவ்வாறே
நிகழ்ந்திருக்குமென்றே அவதானிக்கிறேன்

அகத்தை ஆய்ந்து ஆய்ந்தே
பொழுதுகள் தீர்ந்தது...
கடிகார முட்கள் முதலில் உன்ன்னை குத்தியது
பின்பு என்னை குத்தியது
வழக்கம் போல...

ஏதேதோ தேடுகிறேன் என்று
ஏன் என்று கூட கேட்காமல்
டாட்டா கூட சொல்லாமல் உன் பின்னே செல்கிறது
அன்றைய பொழுது!

உனக்கென்ன...
இந்த இரவை விடிய வைக்க
நான்
என்ன பாடு படப்போகிறேனோ?  

Monday, July 15, 2013

நட்சத்திரம் ஏன் கண்ணை சிமிட்டுகிறது?



ஒவ்வொரு இரவிலும்
கனவு வரும்..
ஒரு  நாள் கனவில்
இரவு வந்தது...

அந்த கனவில் கூட
நான் சோம்பேறியாக தான் இருந்தேன்
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு!

என்ன ஒரு வில்லத்தனம்,
வருவோர் போவோர் எலாரிடமும்
என்னை ரசனையாளன் என்று
அறிமுகப்படுத்திக்கொண்டேன்!

எரிந்து விழுந்த
பால் வெள்ளியை
எண்ணிய கணக்கில் வைக்கவா?
எண்னாத கணக்கில் வைக்கவா என்று
புதிரும் அறிவித்தேன்...

நல்ல வேளை
நிலா இல்லை...
அது ஏன் என்றும் தெரியவில்லை...

அலாரத்தை ஆசீர்வத்து விட்டு
அதற்கு நல்லிரவும் சொல்லிவிட்டு
மீண்டும் தூங்க எத்தனிக்கும் போது தான்
என்னை சுட்டு
என் கனவில் புள்ளி வைத்தது
சூரிய  நட்சத்திரம்!


என் கவிதையின் தலைப்பை
திருத்தி தந்து விட்டு போகிறது
விடியல் வானம்! 
இப்போது வாசியுங்கள் திருத்திய தலைப்பை!

நட்சத்திரம்
என்
கண்ணை
சிமிட்டுகிறது!

  

Wednesday, July 10, 2013

முதல் காதல்

நீ பயணிக்கும்
ஒரே காரணத்துக்காக 
மகளிர் பேருந்தில் ஏறி
அசடு வழிந்திருக்கிறேன்!

உன் கண்முன்னே
கிளி ஜோசியக்காரனை
வம்புக்கு அழைத்து
ஆருடம் கேட்டிருக்கிறேன்!

கத்தாளை இலைகளில்
உன் பெயரும்
என் பெயரும்
சேர்த்து எழுத எடுத்துப்போன
கருவேல முட்களை கொண்டு
உன் பெயருடன் இணைத்து எழுதப்பட்ட
வேறு வேறு பெயர்களை
அழிக்க வேண்டியதாயிற்று!

நீ பெரிய மனுஷி ஆனதை
ஊர் முழுக்க சொல்லிக்கொண்டு திரிந்ததில்
உன் பெற்றோரை மிஞ்சியவன் நான்!

என்னை ஏற்றுக்கொள்ளாத
எல்லா தருணங்களும்
நினைவில் இருக்கிறது...
எவ்வளவு முயன்றும்
மீட்டெடுக்க முடியாத அளவுக்கு
சந்தோசம் மண்டிக்கிடக்கிறது
என்னை நீ ஏற்றுக்கொண்ட தருணம்!!

உன்னால் கவனிக்கப்படாதவை
என்று நான் எண்ணிய
அசட்டு தனங்களையும்,
அசட்டு தருணங்களையும்
உனக்குள் காதல் அரும்பிய
கணங்களையும்
சிணுங்கி சிணுங்கி
பட்டியலிடும்போது தான்
விஸ்வரூபம் கொள்கிறது
நம் காதல்!  


Thursday, January 10, 2013

உரிமைக்குரல்

உரத்து ஒலிப்பவை
கண்டனக்குரல்கள் மட்டுமல்ல...
உரிமைக்குரலாக கூட இருக்கலாம்...

அன்பிற்குரியவர்களின்
கண்டனத்திற்கு
என்றேனும் நாம் காட்டும்
எதிர்ப்பு என்பது
எதிர்பாராத தாக்குதலுக்கு சமம்...

அந்த தாக்குதலில் காயங்கள்
இரண்டு பக்கமும்
என்பதில் மாற்றமில்லை...


காயங்களை விட தழும்புகளின் வேதனை
அதிகமாக இருக்கிறது..

முறிந்த எலும்பு
ஆறு மாதத்தில் ஊறி விடுகிறது
முறிந்த உறவுகள்
புகைந்து புகைந்து
 ஊதுகிறது

நினைவிருக்கட்டும்
உரத்து ஒலிப்பவை
கண்டனக்குரல்கள் மட்டுமல்ல...
உரிமைக்குரலாக கூட இருக்கலாம்...



 

Wednesday, January 2, 2013

வெட்க வேட்டை

எப்போதும் சிரிப்பும்
கும்மாளமும் நிறைந்தது
புது மண வாழ்க்கை...

காத்திருந்த பருவங்கள்
சிறகு முளைத்து பறக்கிறது...
வெட்கங்களை வேட்டையாடி
கொன்றுவிட்டோம் .

உன் ஒவ்வொரு
சிணுங்கலும் ஒவ்வொரு முனகலும்
தவம் இருந்தவனுக்கு 
கடவுள் அந்தஸ்தைக் கொடுக்கிறது.
 
கூட்டுக்குடும்பத்தில்
நம் உறவுகள்
நம்மை பார்க்கையில்
கண்களுக்குள் ஒரு திரையிட்டுக்கொள்கின்றனர்..
நாமும் அவர்கள் கடந்து போகையில்
நமது கண்களுக்குள்
திரையிட்டுக் கொள்கிறோம்..

குளித்து விட்டு போனது நீ..
தலை துவட்டிககொண்டிருப்பதேன்னவோ நான்.

பாலை பூனையும்
பூனையை பாலும்
கவர்ந்து அருந்த
காத்திருக்கும் திருட்டுத்தனத்தில் இருந்து
தொடங்குகிறது
நம் வாழ்விற்கான முதிர்ச்சி.