Monday, May 2, 2016

உவர் நதி


ஓடும் நதியோரத்தில் பாதி மூழ்கிய கிளை
ஒட்டு மொத்த நதியின் நீளத்திலும் 
நனைந்துகொண்டேயிருக்கிறது

பூக்களின் தாவணியில்
இயங்கும் கண்களாக
மது அருந்தும் வண்டுகள்

எந்த மழைக்கும் 
மணக்காத தரையே வாய்த்திருக்கிறது
இந்த வனத்திற்கு

பகலின் வெப்பம் இறங்க அனுமதிக்காத
மரங்களின் தளவாய்த்தனங்களில்
தாழ்வு கொள்கிறான் சூரியன்

எப்பொழுதேனும் விலகி விழும் வெயிலால்
வெந்நீர் ஆக்க முடியவில்லை
இந்த நதியை

இருந்தாலும்
என் நிழலின் வடிவத்தில் 
ஒரு புதுக்குளிர்ச்சி கண்டு ஓடுகிறது 
கடல்நோக்கி ஓடும் நதி!!

நதி ஓடும் கரையில் விழுந்த 
கண்ணீர் துளி 
சமுத்திரம் வரை பயணப்படும் 
வழியில் நீர் அருந்தும் 
யாருக்கும் உவர்ப்பைக் கொடுக்காமல்!