Tuesday, December 27, 2016

பிம்பம்

உடல் பெருத்து
கடமைகள் பெருத்து
குடும்பமும் குட்டியுமாய்
ஒப்பனை பொறுப்பற்ற
தோற்றத்தில் தற்போது இருந்தாலும்
என்னோடு வாழக்கிடைக்காத
காதலியின் பிம்பம்
இன்னமும் தேவதையின் அந்தஸ்தை
இழக்கவில்லை..


என் பிம்பம் மற்றும்
உண்மையின் மேலுள்ள அவளின்
அபிப்ராயம் குறித்த கேள்விகளிலேயே
வாழ்நாள் முழுக்க நீள்கிறது என் ஐயம்!

Sunday, September 4, 2016

அன்னை தெரசா..
இனி புனிதர் தெரசா..

இந்த பட்டத்தின் மூலம் இவரது பெயர் இன்னும் பல உள்ளங்களுக்கு சென்றடையலாம்...ஒரு அந்தோணியாரைப் போல், கேரளா அல்போன்சாவை போல், சாய்பாபாவைப் போல் தெய்வத்தன்மை அடையலாம்.

அல்பேனியாவில் பிறந்து ரோமன் கத்தோலிக் துறவியாகி சமூகத்தால் அறுவறுக்கப்பட்ட எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் பீடித்த மனிதர்களை ஆதரவற்ற குழந்தைகளை  முதியவர்களை வாஞ்சையோடு தத்தெடுத்து அருஞ்சேவை செய்தவர். அவரது சேவைக்கு முதலில் விமரசனங்கள் இழிவுகள் இருந்தன. பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டார்.

பின்னாளில் அவர் வாழும் காலத்திலேயே சேவையின் சிறப்பு உணர்ந்து போற்றத் தொடங்கிவிட்டது உலகம்.

ஆனால் இப்போது அவருக்கு கொடுக்கப்பட்டிருப்பது புனிதர் பட்டம்

வாழும் போதும் வாழ்ந்த பிறகும் கல்லறையில் அற்புதம் நிகழ்த்தும் கிறிஸ்தவ துறவிகளை வாடிகன் போப் அங்கீகரித்து வழங்கும் பட்டம்.

சமீபத்தில் ஒரு பாதிரியார் சொன்னார்..
பெருமளவு சேவை செய்த அன்னை தெரசாவுக்கே இந்த பட்டம் கிடையாது. ஏனென்றால் இது அற்புதத்திற்கான பட்டம். சேவைக்கான பட்டமல்ல.

அன்னை தெரசா விசயத்திலும் இந்த பட்டத்தை வழங்கியவர்கள் அவர் சேவையை குறிப்பிட்டு..இதே போல் சேவை செய்யும் பணிக்கு பலருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்த காரணத்தால் அன்னை தெரசாவுக்கு இந்த புனிதர் பட்டத்தை வழங்குகிறோம் என்றால் கூட  பரவாயில்லை.

இந்த உலகத்தில் ஒரு மனிதனால செய்ய முடியாத ஆனால் மனிதனால் சாத்தியப்படக் கூடிய அன்பைப் பொழிந்த அன்னை தெரசாவின் சேவை...இறந்த பின் கல்லறையில் இருந்து கொண்டு ஒரு பெண்ணின் புற்று நோயைக் குணமாக்கினார் என்ற மேஜிக் பேக்கேஜில் அடைக்கப்பட்டுள்ளது.
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நமக்கு அவரது சேவை மறந்திருக்காது..

ஆனால் 100 வருடம் கழித்து வரும் மனிதர்களுக்கு அன்னைதெரசாவின் கடவுள் பிம்பம் தாண்டி மனிதநேயம் இரண்டாவது இடத்தில் தாற் நிற்கும் அல்லது தெரியாமலேயே கூட போய்விட வாய்ப்புள்ளது.

மனித சேவையை விட...அற்புதம் மகிமையை கொண்டாடும் கலாச்சாரம் மேலாேங்குமேயானால்..இன்னமும் கடவுளர்கள் உருவாவதை நிறுத்த முடியாது..மனிதர்கள் உருவாவதை வேண்டுமானால் நிறுத்தலாம்

Monday, May 2, 2016

உவர் நதி


ஓடும் நதியோரத்தில் பாதி மூழ்கிய கிளை
ஒட்டு மொத்த நதியின் நீளத்திலும் 
நனைந்துகொண்டேயிருக்கிறது

பூக்களின் தாவணியில்
இயங்கும் கண்களாக
மது அருந்தும் வண்டுகள்

எந்த மழைக்கும் 
மணக்காத தரையே வாய்த்திருக்கிறது
இந்த வனத்திற்கு

பகலின் வெப்பம் இறங்க அனுமதிக்காத
மரங்களின் தளவாய்த்தனங்களில்
தாழ்வு கொள்கிறான் சூரியன்

எப்பொழுதேனும் விலகி விழும் வெயிலால்
வெந்நீர் ஆக்க முடியவில்லை
இந்த நதியை

இருந்தாலும்
என் நிழலின் வடிவத்தில் 
ஒரு புதுக்குளிர்ச்சி கண்டு ஓடுகிறது 
கடல்நோக்கி ஓடும் நதி!!

நதி ஓடும் கரையில் விழுந்த 
கண்ணீர் துளி 
சமுத்திரம் வரை பயணப்படும் 
வழியில் நீர் அருந்தும் 
யாருக்கும் உவர்ப்பைக் கொடுக்காமல்!

Wednesday, April 27, 2016

முன்னோரின் பிள்ளைகள்


தலைப்பிள்ளையை எரித்தும்
மற்றவர்களை கீழ் மேல் திசையாக புதைத்தும் 
திருமணமாகாதவர்களை 
தென்வடல் திசையாக புதைத்தும் வந்த ஊர் 
இன்று பெருத்துவிட்டது

மயானம் ஊருக்கு வெளியே 
தள்ளியே போய் விட்டது

உயிரோடிருப்பவர்களுடன் 
போட்டியிடத் திராணியற்று
எரிய சம்மதித்து விட்டன பிரேதங்கள்

புதைக்கப்பட்டவர்களை அசைக்க முடியவில்லை
வலுவான காங்க்ரிட் எழுப்பி
கணபதி ஹோமம் நடத்தி
அவர்கள் மார்பின் மேலேயே 
படுத்துறங்கி
முன்னோரின் பிள்ளையாகி விட்டனர்
முன்னொரு காலத்தில்
பேய்களின் பிள்ளைகளாய் 
அழைக்கப்பட்டவர்கள்!

Monday, January 25, 2016

சொக்கட்டான்



ஆடத் தொடங்கியதுமே
வெற்றி எனக்கு என்கிறான்
ஒருவன்!

தாயம் விழுந்ததுமே
வெற்றி எனக்கு என்கிறான்
ஒருவன்!!

ஆட்டம் சாதகமாய் இருக்கையில்
வெற்றி எனக்கு என்கிறான்
ஒருவன்!!!

இவர்களையெல்லாம் விட
ஆட்டத்தின் கடைசித் தகுதிக்காரன்
முதலில் பழம் வென்று
எப்படியோ தப்பிப் பிழைத்தேன்
என்று புலம்பும்
கரகர ஆட்டக்காரன்!!