Tuesday, December 18, 2012

.............

நிராசையாகவும் நீ!

அப்போது என்
ஆசையாக மட்டுமே
இருந்தாய் நீ!

ஒற்றை சிறகுகளால்
கரம் கோர்த்து
மற்றொரு சிறகால்
சிறகசைத்து
விடியல் நோக்கும்
கனவாய்  பயணித்தோம்.

நமக்கான கூட்டுக்கு
குச்சிகள், முட்கள்
வெளிச்சத்துக்கு சில மின்மினி பூச்சிகள்
தண்ணீரில் நனைத்த மண்ணுருண்டைகள்
எல்லாமாய் எடுத்து வந்து

என் உதிர்ந்த
இறகை ஒட்டி விட
உலர்ந்த ரத்தம்
பச்சை பிடிக்க  
இறக்கைகளின் வலி ஆற்ற
கூட்டுக்கு திரும்புகையில்

என் நிராசையாகவும்  நீ!

அப்போதும்  என்
ஆசையாக மட்டுமே
இருந்தாய் நீ!
 

Saturday, December 15, 2012

மீசை பால்யம்

என்  மீசையின்
நரைமுடிகளை
கத்தரித்துக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொன்றாக ...

அங்கே ஒட்டு மீசை வைத்து
விளையாடிக்கொண்டிருக்கிறது
என் பிள்ளை ...

என் செயல்
மூட நம்பிக்கை...
பிள்ளையின் செயல் 
நம்பிக்கை...



 

Thursday, December 13, 2012

விதி(மீறல்) வலியது

அப்பெல்லாம்
காதலிச்சு கல்யாணம் பண்ணா
ஓடிப்போயிட்டங்கனு தான் சொல்வாங்க...
இப்பவும் அப்படி தான்...

எட்டாம் வகுப்பு படிக்கும் போதே
ஆச வந்துடிச்சி...
பெரிய ஆளா ஆனப்புறம்
ஓடிப்போய் கல்யாணம்
பண்ணவேண்டும்  என்று

உள்ளூர்  நாடக திடலில்
ஆண்கள் "மேல்" புறமாகவும் 
பெண்கள் கீழ்புறமாகவும்
உட்கார வைத்திருக்கும் போதும்
ஓடிப்போகும் பழக்கம்
இருக்கத்தான் செய்தது.

அப்பவும்   காதலிச்சி
ஓடிப்போய் கல்யாணம்
செய்துகொண்டு தான்
இருந்தார்கள்


கல்வியும் செல்வமும்
ஆதிக்கம் செலுத்திய சமூகத்தில்
ஆணும் பெண்ணும்
பேசுறத கண்  காது  வைத்து பேச
நேரமின்றி தான் போனது
என் சமூகத்திற்கு...

ஆண் பெண் நட்பு
கொஞ்சம் நடைமுறையானது..
காதல் திருமணங்கள்
பெற்றோர்கள் அரை மனதுடன்
செய்து வைக்க தொடங்கிவிட்டார்கள்...

ஓடிபோறவங்க  இப்போ
இருக்க மாட்டாங்க
என்ற  நம்பிக்கையில் தான்
நான்  கடுமையாய்
ஏமாந்தது தெரிந்தது...

ஆனால்..
ஆனால்...
ஆனால்.......
கள்ளக்காதல் மட்டுமே
செய்து கொண்டிருந்த  திருட்டு பூனைகள்
கள்ளக்கல்யாணம்  செய்வதற்காய்
ஓடிப்போகின்றன  இப்போது..

உலகத்தில் மாறுவது வேண்டுமானால்
விதிகளாய்  இருக்கலாம் 
மாறாதது
விதிமீறல்  மட்டுமே...



 

Sunday, December 9, 2012

மரண போதை

பிள்ளையாய் இருந்த பொழுதுகள்
தெய்வமாய் வாழ்ந்த பொழுதுகளாம்.
அதனால் தான் அவை நினைவில் நிற்பதில்லை
போலும்...
  
இரத்தம் பார்த்து
அழாமல் அம்மாவின்
திட்டுதலுக்கு அஞ்சிய  பால்யம்

வளர வளர
தனிமை படுத்தப்பட்ட
ஆண் பெண் நட்பு...

கூட்டாஞ்சோறு விளையாட்டில்
அம்மா வேடம் போட்ட
தோழியே
மனைவியாக நினைக்கும்
உள் மனத்தின் கனவு...

திருட்டு  புகை
திருட்டு மது
காசின்றியே கிடைத்தது

கல்வியை கல்வி நிறுவனங்களும்
கலவியை ஹார்மோன்களும்
கற்பித்து கடமையாற்றின 

திருட்டு தனமாய்
பால்யத்திலிருந்து
வாலிபத்திற்கு தாவிய
பருவம்.

திடீரென்று தான்
காதலிக்கிறோம்..
திடீரென்று தான்
காதலிக்கப்படுகிறோம்...

காதல்  காமத்தை
 நோக்கியும்
காமம் பார்த்த காதல்
விலகுதலை விரும்பியும்
கழிந்தன பொழுதுகள்

எல்லாவற்றிலிருந்தும்
மீட்டுக்கொடுத்த காலம்
பிள்ளைகள் பெற்று
அவர்களுக்காய்
இயங்கும் ஏங்கும்  போதையிலிருந்து
மட்டும் மீட்காமலேயே விட்டு விடுகிறது
மரணம் வரை .
 


Friday, November 9, 2012

யானைக்கனவு

யானைக்கு பயம் தான்
மூடநம்பிக்கை..
பாகனுக்கு தைரியம் தான்
மூடநம்பிக்கை

டைனோசர்கள் இப்போது
வாழ்ந்துகொண்டிருந்தாலும்
அஞ்சத்தேவையில்லை..
பிச்சை எடுக்க
பழகிவிடும்..

காட்டுக்குள் நாடும்
நாட்டுக்குள் காடும்
ஊடுருவும் போட்டியில்
வெற்றியும் தோல்வியும்
நாட்டுக்கேயன்றி காட்டுக்கு இல்லை..

போர்க்களத்தில் காரணமின்றி
இறந்த சரித்திரத்தை விட
பிச்சை எடுத்து சாவது மேலானது 


எனினும்
குழந்தைகள் தன மீது
சவாரி செய்யும் போது
வீதிகளில் பிச்சை எடுக்கும்
வேதனையை மறுக்கின்றன யானைகள்  

Sunday, November 4, 2012

பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன்

பாதையில் இடது பக்கமாகவே
போக வேண்டும்...

முன்னாடி யார் வந்தாலும்
ஹாரன் அடிக்க வேண்டும்...

வளைவில் திரும்பும் பொது
கை சிக்னல் போடுவதற்கு என்றே..
தனி சிஸ்டம் உள்ளது...

வலது பக்கம்  திரும்பும் போதும்
இடது  பக்கம்  திரும்பும் போதும்
வலது கையால் தான் சிக்னல் காட்ட வேண்டுமாம்..
சிக்னல் தான் வேறு வேறு

வண்டி நிறுத்தும் போது
வலது கையை உயர்த்தி
நிறுத்துவதற்கான 
சிக்னல் காண்பிக்க வேண்டும்  

எந்தெந்த ஸ்பீடில்
எந்த  கியரில் போனால்
எரிபொருள் சேமிக்க முடியும்...

லைசென்ஸ்  ..இன்சூரன்ஸ்  
இவற்றை புதுப்பிக்கும் 
முறைகளை  புரிந்து கொள்ளல் வேண்டும்..

டூல் பாக்ஸ்,  ஸ்டெப்னி டயர்,
"எல்" போர்டு விழிப்புணர்வு....
விபத்து பற்றிய அறிவுறுத்தல்...
அடங்கிய
ஆயிரம் அறிவுரைகளை
கஷ்டப்பட்டு மறந்த பிறகு தான்
ஓரளவுக்கு
பைக் ஓட்ட கற்றுக்கொண்டேன்...

என்றேனும் ஒரு நாள்
மீண்டும் மீட்டுக்கொள்வேன்
அறிவுரைகளை...

  

Saturday, November 3, 2012

நான்... நான்.. நான்...



இசையாலும் ராகத்தாலும்
நிரப்பி வைக்கிறேன்
என் நேச கணங்களை..

உன் மீது அன்பு செலுத்த கூட
நேரமின்றி போகிறது
உன்னைக் காதலிக்கும் அவசரத்தில்

நல்ல பாடல்களின் வரிகளை
கேட்டுக்கொண்டிருக்கும் போதே
என் கவனத்தை திசை திருப்பி விடுகிறாய்...

சில பாடல் வரிகள்
உன்னிடமிருந்தே என்னை
திசை திருப்பி விடுகின்றன..

இவற்றில் யார் பெரியவர்
என்ற போட்டியில்
நீயும் பாடலும்
சண்டையிட்டுக் கொள்ளும்
வேளையில்
நெகிழ்ந்து கொடுத்த நான்
விஸ்வரூபமாய் நிற்கிறேன்
நடுவில்..

நான்... நான்.. நான்...
இவற்றை தவிர வேறு
என்ன இறுக்கிறது
காதலிலும் ரசனையிலும்.

.

Sunday, August 26, 2012

என்னை தேடி தாருங்கள்



சிறகு முளைத்து தான்
பறக்க வேண்டுமெனில்
நான் அதில் விதிவிலக்கு..

சமுதாயம் விதிகளுக்கு
தன கண்களை மூடிக்கொள்கிறது
விதி விலக்குகள் வரும்போது தான்
தன கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு
கவனிக்கிறது

என்  நம்பிக்கையின் 
கண்கள் அழுது வடிந்துகொண்டும்
அவநம்பிக்கையின் கண்கள்
பிரகாசமாகவும் இருக்கின்றன

என்னுடைய செயல்களுக்கு  வரும்
விமர்சனங்களுக்கு   பஞ்சமில்லை
யாருடைய கருத்தாகவோ,
யாருடைய கூற்றாகவோ
மாற்றப்பட்டு உலவுகிறேன் நான்

மரபு காவலர்கள்
கத்தியோடும்
கொள்கை காவலர்கள் 
துப்பாக்கியோடும்
என்னை சுற்றி..

இந்த அமளி துமளிக்குள்
யாராவது ஒருவர்
"என்னை மட்டும் "
தேடிக்கொடுங்கள்..
உங்களுக்கு புண்ணியமாய் போகும்

Friday, July 13, 2012

ஒரு நாள் ராஜா பார்க்க வேண்டுமா..?

முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராய்  வருவார்  .. இதை  ஒரு கதைக்களமாக  அந்த படத்தில் அமைத்திருப்பார்கள். ஆனால் உண்மையிலேயே ஒரு நாள் ராஜா சிஸ்டம் அறிந்திருக்கிறீர்களா?

திருநெல்வேலி  மாவட்டம்   பாபநாசம் - காரையாறு மலைப்பகுதியில் உள்ள காணிக்குடியிருப்பு  சொரிமுத்து அய்யனார் கோவிலில் இந்த காட்சியை பார்க்கலாம்..

இந்த கோவிலை சிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்தவர்கள் நிர்வகித்து வருகின்றனர்.. வருகிற ஆடி அமாவாசை ( ஜூலை 6 - செவ்வாய்க்கிழமை   )அன்று இங்கு மாபெரும் திருவிழா நடக்கும். இந்த திருவிழாவில் ஜமீன் அவர்கள் தான்  மன்னராய்   இருந்ததை குறிக்கும்  வகையில்  பழங்காலத்து  மன்னர்  உடையிலேயே உடைவாள், மெய்க்காவலன்  சகிதம்  அரியணையில்  வீற்றிருப்பார் ... மக்கள் அவரை பார்ப்பதும் வணங்குவதும் நம்மை மன்னர் காலத்திற்கே அழைத்து செல்லும் அந்த காட்சி.

இந்த ஒரு நாள் ராஜாவை பார்க்கையில் பலவிதமான சிந்தனைகள்  மனதிற்குள் ஓடுகின்றன..

மன்னர் என்பவர் இப்படி தான் இருந்திருப்பாரோ...மன்னர்களின் உடல் மொழி இப்படித்தான் இருந்திருக்குமோ.அவருக்கு காவலாக இருக்கும் மெய்க்காப்பாளர் பராக்கிரமசாலியை போல் மிகவும்  மிரட்டலாக இருக்கிறார்..வருடத்தில் ஒரு முறை இவர் மன்னராக வீற்றிருக்கும் நேரம் தவிர மற்ற நாட்களில் இவர் என்ன வேலை செய்வார் என்ற கேள்வியும் மனதில் எழும்..சாதாரணமாக மன்னர் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அந்த மெய்க்காப்பாளர் ஒரு பி.ஏ வாக செயல்படுகிறார்...அவரது முகம் எல்லோருக்கும்  நன்கு தெரியும் வண்ணம் சோடிய விளக்குகள் ஜொலி ஜொலிக்கும்..அவரது தலையின் பரிவட்டம் வசந்த மாளிகை சிவாஜி கெட்டப்பை நினைவு படுத்தும் ..தலைக்கு மேல் கதைகளில் வரும் வெண் கொற்றக்குடை  போல் ஒரு கலர் கொற்றக்குடை விரிந்திருக்கும் .பக்த கூட்டமே சாமியாடிகளை வணங்கும் வேலையில் சாமியாடிகள் அங்கு மன்னரை வணங்கிக்கொண்டிருப்பார்கள்..மேல தாளத்துடன் மன்னர் தரிசனத்தை மக்கள் ஆவலாக பார்ப்பதும் அவர் உடை பற்றி பேசுவதும் அவரது முதுமை பற்றி விமர்சிப்பதும் வரலாறில் நாம் எழுத்தாய் படித்ததை காட்சியாய் கண்ணில் வரும்..
விழா முடிந்த பிறகு அந்த மன்னரையும் மெயக்காப்பாளனையும் எங்கு பார்த்தாலும் அந்த மன்னர் கோலம் தான் நினைவுக்கு வரும்.

எத்தனை மக்கள் ஏன் என்று கேட்காமல் அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறோம்...அப்படிஎன்றால் அவருக்கு சகல அதிகாரமும் இருக்கும் போது அவரது அதிகாரம் எப்படி இருந்திருக்கும். பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் எழுத்து சுதந்திரம் எல்லாம் இவர்கள் நிர்ணயித்த அளவுகளிலேயே நின்றிருக்கும்..

வரலாற்றை  கண்முன்னர் காட்சிப்படுத்திக்கொண்டே  அவர்கள் நமக்கு சொல்லும் செய்தி
" சுதந்திரம என்பதை என்ன வென்பதை உணர்ந்து கொள்ளுங்கள்" 

மன்னரை  பற்றி

சிங்கம்பட்டி மன்னர் 32-வது பட்டம் மேதகு தென்னாட்டுப் புலி, நல்லகுட்டி, சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா பட்டத்துக்கு வந்ததில் இருந்து இன்று வரை ஆண்டுதோறும் அரசவை தர்பார் கொலுவில் வீற்றிருந்து ராஜ தரிசனம் தருகிறார்.

காரையாறு சொரிமுத்து அய்யனார் தேவஸ்தான அறங்காவலர் என்ற முறையில் ஆண்டுதோறும் கோயில் பெருவிழா நடைபெறும் ஆடி அமாவாசை தினத்தன்று ராஜ தர்பார் நடத்துகிறார். இதைக் காண திரளான கூட்டம் வருகிறது.

சிங்கம்பட்டி அரசு கி.பி. 1100-ல் உதயமானது. பாண்டியப் பேரரசின் கீழ் சிற்றரசாக இருந்தது. விஜயநகர மன்னர் காலத்தில் கி.பி. 1433-ல் பாளையமாகத் திகழ்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் 1802-ல் ஜமீன்தாரியாக மாறியது. 900 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்தது சிங்கம்பட்டி ஜமீன் சமஸ்தானம். 1948-ல் ஜமீன் ஆட்சி முறை முடிவுக்கு வந்தது. சிங்கம்பட்டி சமஸ்தானத்தை 31 மன்னர்கள் பட்டம் தரித்து ஆட்சிபுரிந்து வந்தனர். தற்போது உள்ளவர் 32-வது "மன்னர்'.

Sunday, June 24, 2012


மெழுகுவர்த்தி திருடர்கள்

பால்யத்தின் நினைவுகளை அசை போடுவதே தனி அலாதி தான்..

கார்த்திகை மாதத்தில் எல்லோர் வீட்டிலும் தீபம் அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள்...கால் சட்டையுடன் நாங்கள் திரியும் பருவத்தில் எங்களுக்கு அன்று தான் நல்ல மெழுகுவர்த்தி வேட்டை... இரவு பத்து மணிக்கு துவங்கும் மெழுகுவர்த்தி வேட்டை...

காற்றில் அணைந்த பாதி மெழுகுவர்த்திகள் எங்களால் சூறையாடப்படும் .எவனாவது கால்சட்டை பை நிறைய மெழுகுவர்த்தி துண்டுகளை காட்டி பெருமிதம் கொண்டால் நெஞ்சு பொறுக்காது; போருக்கு செல்லும் வீரர்கள் போல் புறப்பட்டு விடுவோம் மெழுகுவர்த்தி சேகரிக்க...இல்லை இல்லை திருட..

மெழுகுவர்த்தி வேட்டையின் முக்கியமான இடம் கல்லறையில் திருடுவது தான்...இந்த இடத்தில் வேண்டுமானால் சேகரித்தல் என்று போட்டுக்கொள்ளலாம்..

கார்த்திகை தீப திருநாள் அன்று  கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

கல்லறைக்கு மாலையிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி ஐந்து நிமிடத்தில் அங்கிருந்து திரும்பிவிடுவார்கள்..காற்றும் எங்களுக்கு தோதுவாக ஒன்றிரண்டை விட்டுவிட்டு பிற மெழுகுவர்த்திகளை அணைத்துவிடும் ..

கல்லறையில் மெழுகுவர்த்தி திருடும் போது கல்லறை பற்றிய அச்சம் கொஞ்சமும் இருக்காது...இறுதி யாத்திரை வண்டி போனால் கூட கால் சட்டையை தொப்புளுக்கு மேல் ஏற்றும் பயம் அன்று மட்டும் எங்கோ போய்விடும்..

கால்சட்டை பை மேல் சட்டை பை எல்லாவற்றிலும் மெழுகுவர்த்தி நிரப்பி வீட்டிற்கு கொண்டு வருவோம்...

வீட்டிற்கு வந்த பின் தான் பெண் பிள்ளைகளின் பங்களிப்பு அதில் தொடங்கும்...

அதற்கென்றே வைத்திருக்கும் பழைய ஈய பாத்திரத்தில் மெழுகை காய்ச்சுவாள் அக்கா..

பின் தயாராய் வைத்திருக்கும் பப்பாளி இலை குழாய், தேங்காய் சிரட்டை,  பழைய சைக்கிள் பெல்  இப்படி பல அச்சுகளில்  மெழுகை ஊற்றி புதிய மெழுகுவர்த்தி செய்வாள்..

ஒரு மணி நேர தூக்கத்துக்கு பிறகே  கல்லறை பீதி வரும்...தூக்கம் தொலைந்தே போகும்...எண்டா என் மெழுகுவர்த்தியை திருடுனே என்று கல்லறை பிரேதங்கள் கேட்பது போல் தோன்றும்...

ஒரு வழியாய் கண்ணயர்ந்த அதிகாலை தூக்கத்தையும்  அக்காவே கலைக்கிறாள்..

எழுந்திரிடா..எழுந்திரிடா
என்று எழுப்பி...தினுசு தினுசாய் மெழுகின் வடிவத்தை காட்டி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவாள். நான் திருடிய சேகரித்த மெழுகுவர்த்திகள் புத்தம் புதிய வடிவத்துடன் என் கைகளில் தவழும்...
கல்லறை பீதி காணாமலே போகும் .

Tuesday, June 19, 2012

கைவசம் இருப்பது
ஒரே ஒரு
பட்டு சட்டை;
அழுக்கு பிடிக்கும் முன்
வாழ்க்கையை
முடித்துக்கொள்கிறது
 பட்டாம்பூச்சி

Sunday, June 17, 2012

அழைப்பிதழ்


உனக்கான வீதியில்
பல முறை
வந்திருக்கிறேன்

உன்னை விருபியவர்களின்
கூச்சல்,
உன்னால் நிராகரிக்கப்பட்டவர்களின்
ஓலம்
இவைகளுக்கு மத்தியில்
எப்படி நிம்மதியாய்
வசிக்கிறாய் நீ?

எனக்கான வீதியில்
ஒரே ஒரு முறை
வந்து பார்...

உனக்காக பூத்த பூக்கள்
எட்டு நாளுக்கு ஒரு பட்டாம்பூச்சி
என குடியமர்த்திவிட்டு
வெளியேறி விடுகிறோம்

நானும்,
எனது பொய்களும்

முதல் காதல் கடிதம்


கல்லூரி சுவற்றில்
உனது பெயரையும்
எனது பெயரையும்
இணைத்து கரி கொண்டு
கிறுக்கியிருந்தான்
ஒரு அநாமதேயன்.

நீயும் நானும்
எழுதாத
நமக்கான முதல் காதல் கடிதம்
அது!

நம்மை
ஆப்பிள் கடிக்க செய்த
அந்த சாத்தானை
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்

கடவுள் கிரீடம்
சூட்டுவதற்காக!

பங்குனி உத்திரம்


ஐஸ் வியாபாரிக்கும்
ராட்டினக்காரனுக்கும்
பூசாரிக்கும் இது சீசன்

வெறி கொண்ட சாமியாடி
ஆட்ட முடிவில்
பிள்ளைகளுடன் சாப்பிடும்
கறி சாப்பாடு.

கடந்த ஆண்டையும்
இந்த ஆண்டையும்
ஒப்பிட்டு உரையாடும்
முதியவர்கள்.

பருவத்தின் கனவை
பார்வையால் பகிர்ந்து கொள்ளும்
இளசுகள்

தெய்வங்கள் உள்பட
எல்லாருடைய கவனத்தையும்
ஈர்க்கும் குழந்தைகள்

தொலைந்து போன
தூரத்து உறவுகளை
தேடி அலையும்
கண்ணீர் சொந்தங்கள்..

எல்லோருக்கும் சேர்த்து
சிலுவை சுமக்கின்றன
பங்குனி உத்திரத்துக்கு
நேந்து விடப்பட்ட
பலி ஆடுகள்

மோதிரக்குட்டு


நீ
என்றோ மாட்டி விட்டு
பின் கழற்றிப்போன
மோதிரத்துக்காக
இன்னமும் அழுகிறது
என் மோதிர விரல்

அது எந்த உலோகத்தில்
செய்யப்பட்டிருப்பினும்
என் உலகத்தில்
அது விலை உயர்ந்தது!

உன் கரங்கள் பட்ட பிறகு
அதற்கு ஒரு சுவாசமும்
சுவாச பையும்
முளைத்து விட்டது

பிடிதரம் அற்று
மடங்கி நிமிரும்
சுதந்திரம் அதற்கு
பிடிக்கவில்லை

கால் விலங்குக்கு
அடம்பிடிக்கும்
மன நோயாளியை போல்
இன்னமும்
அழுதுகொண்டே இருக்கிறது
அந்த விரல்.