Wednesday, December 3, 2014

1.12.2014 குங்குமம் கவிதைக்காரர்கள் வீதி


பெண்டாட்டி தாலிய வித்துத் தா



வக்காடு தாத்தா மோட்டார் கிணத்துல தான் மோட்டார் ஓடும் போது வாய்க்கால்ல மடை கட்டி விளையாடுவோம் நானும் அற்புதராஜும்...குளிக்க மாட்டோம்

கரண்ட் மோட்டார் வரும் முன்ன உள்ள ஆயில் என்ஜின் மோட்டார் அது...

வேட்டிய மடிச்சி தார் பாய்ச்சிகிட்டு வக்காடு தாத்தா என்ஜின ஸ்டார்ட் பண்றதையே தேமேன்னு பாத்துகிட்டே இருப்போம்..

ஸ்டார்ட் பண்ணவும் மடை கட்டுற வேலைய தொடங்கிடுவோம்

ஒரு நாள் என்ஜின் மோட்டார் சவுண்டோட சேர்த்து
மொட்ட மண்டயன் சொட்ட மண்டயன்னு ரைமிங்கா சொல்லிப் பாத்தேன்...அற்புத பெருமாள் மொட்டை போட்ருந்தான்..

அவன்ட்டயும் சொன்னேன்
டேய் அற்பு..மோட்டார் சத்தத்த கேளேன்...
மொட்ட மண்டயன் சொட்ட மண்டயன்
மொட்ட மண்டயன் சொட்ட மண்டயன்னு சொல்லுதுடான்னு....

அவனுக்கு சுர்ர்ன்னு வந்துது கோபம்...

எனக்கு அப்டி கேக்கலடா...
ஓட்டப்பல்லன் தெத்துப்பல்லன்
ஓட்டப்பல்லன் தெத்துப்பல்லன்னு தான் எனக்கு கேக்குது என்றான்

எனக்கு சில நாட்களுக்கு முன்னாடி தான் பல் விழுந்திருந்தது,..

நான்
மொட்ட மண்டயன் சொட்ட மண்டயன்னு சொல்ல
அவன்
ஓட்டப்பல்லன் தெத்துப்பல்லன்னு சொல்ல

வக்காடு தாத்தா கவனிச்சிட்டார்

மோட்டார் சவுண்டு எப்டி இருக்கு தாத்தா என்றேன்

அதுக்கு அவரு...
அடேய்..இந்த மோட்டாரு கோளாறு பாக்க நான் செலவழிச்ச துட்டுக்கு கணக்கே கிடையாது...

என் காதுக்கு
உன் பெண்டாட்டி தாலிய வித்துத் தா
உன் பெண்டாட்டி தாலிய வித்துத் தா ன்னு தான் கேக்குது ன்னார்...

இப்போ எங்களுக்கும் அப்டித் தான் கேக்குது



Tuesday, November 11, 2014

எரிந்து கொள்

காதலின் கையை
இறுகப்பற்றிக்கொண்டே
சுதந்திரத்தை பற்றி
உரக்கக் குரல் எழுப்புகிறேன்...

உறங்குவதற்கும் விழிப்பதற்கும்
உண்டான தருணங்களை
ஒத்திகை பார்க்க
பயன்படுத்திக்கொள்கிறேன்
முட்டாள் தனமான
அச்சங்களோடு...


நாள்
ஒற்றையடி பாதையிலேயே பயணம்!

இருதலையான பின்னும்
மாட்டு வண்டி தடத்தின்  மீதான
கண்கள் மூடிய பயணம்!


ஆப்பிளை உண்ண  சொல்லி
எவவளவோ வற்புறுத்தின
காம பாம்புகள்!
அதன்  தலையை  நசுக்கி  எறிந்து
எரிந்து கொண்டது தான் மிச்சம்!

இரைக்காக கொல்லப்படாத
பட்டாம் பூச்சியின் ஆத்மா
காரணம் கேட்டு
சிறகடிக்கிறது
இறந்த பின்னும்!

இன்னுமா உலகத்தில்
இல்லாத விஷயங்கள்
வணங்கப்படுகின்றன
என்று கேட்டு
விழுந்து விழுந்து சிரிக்கிறது
காதல்!!

Monday, May 19, 2014

2004ல் நான் திருநெல்வேலி வானொலியில் படைத்த கவிதை

கீழ்வானத்திற்கும்
எழும்பும் சூரியனுக்கும்
நடுவில் விரிந்திருக்கிறது
என் தோட்டம்

இயற்கை அதற்கு நீரூற்ற
எண்ணங்கள் உரமிட
களைகள் எதுவுமின்றி
களைப்பு கொடுக்காமலேயே
துளிர்த்து விடுகின்றன.

கண்ணுக்கெட்டிய  வரை
களைகளின்றி
பயிர்கள் எப்படி?
உங்கள் கேள்வி நியாயமே

புல்லையும் உயிராகவே பார்ப்பவனுக்கு
அது களையென்று தெரியப்போவதில்லை.

இதுதான் முளைக்கவேண்டும்
என்ற தீர்மானமின்றி
உருவாக்கிய தாேட்டம் என்பதால்
எல்லா தாவரத்திலும் சுதந்திர துளிர்ப்பை
பார்க்க முடியும்

 சொர்க்கம் வென்ற தோட்டத்தில்
பூவுக்கான மொட்டுகள்
முகிழ்க்க தாெடங்கிய நேரம்தான்
எனக்கான சோதனையும்
சேர்ந்தே தொடங்கியது

எல்லா பூக்களும்
மதுவாலும். மகரந்தத்தாலும்
நிறைந்திருப்பது தான் இயற்கை
ஆனால் எனது தோட்டத்தில்
அனைத்து  மலர்களும்
கோரிக்ககளாலும் கேள்விகளாலும்
நிறைந்திருக்கின்றன

வண்ணங்களும். வாசங்களும்
அதற்கு இரண்டாம் பட்சம்

சுதந்திர தோட்டத்தில் காலூன்றி
நகரத்து மலர்களின்
வேதனைகளையும் பிரச்னைகளையும்
பட்டியல் போட்டன
அந்த வக்காலத்துப் பூக்கள்

 பூஜைக்கென பறித்துவிட்டு
பக்தன் கையில் படராமல்
சமாதியில் சாந்தியடையாமல்
சாய்ந்தனவே பல மலர்கள்

சஞ்சரிக்கும் காதலர்கள்
ஊடல் அறுக்க
காம்பிலிருந்து கழுத்தறுக்கப்படுகின்றன
இன்னும் பல மலர்கள்

எந்த மனித நாசியும் நுகராவண்ணம்
எந்த வண்டும் பருகாவண்ணம்
தாய்செடிக்கே  உரமாகும்
பல மலர்கள்

வீட்டுத் தோட்டத்தில் பூத்து
வீட்டை வாசம் செய்த பாவத்திறகாய்
புகையிலும். குப்பையிலும்
அழன்று அழுகின்றன
வீட்டுப் பூக்கள்.


மொட்டை மாடியில்
காலைப் பொழுதை
குளுமையாக்கிவிட்டு
உச்சிப் பொழுதில் வெந்துவிடுகின்றன
பல மலரினங்கள்

சைக்கிள் வியாபாரியின்
கூடையில் இருந்துகொண்டு
பலநிற ராேஜாக்கள்
என்று மொட்டுகளை
அடையாளப்படுத்தி
இல்லத்தரசிகளை
ஏமாற்றி வீட்டில் குடியேறும்
எத்தனையோ ரோஜாக்கள்

அத்தனை மலர்களும்
ஒன்றாய் கூடி வைத்த
கோரிக்கைகள் கோக்ஷமானது
கோக்ஷங்கள் இரைச்சலானது

இன்னமு் பிரியாத பெண்ணி்ன் கட்டுகளின்
கேள்வியும் மறுக்கப்பட்டு
நார்கள் வாசம் பெற
தூக்கிலிடப்படும் மலர்களின்
குரல்வளை மெளனமும்
இதய ஓலமும்
என்னை அந்த தோட்டத்தை விட்டே
விரட்டியடிக்கிறது!!!

Tuesday, March 4, 2014

தாக சாந்தி

கனவின் மந்தாரத்தில்
இரை எடுத்த
மலைப்பாம்பாய்
நெளிந்து கொண்டிருந்தேன்
கட்டில் முழுவதும்,

முந்திய நாள் கலவியின்
தடயங்களாய் குறுகுறுத்தன
உள்காயங்களும் வெளி காயங்களும்..

இன்னொரு முறை
இன்னொரு முறை
என்று கேட்டு பெற்ற
எந்த இன்பமும் ஈடு செய்ய வில்லை
என்றோ ஒரு நாள் தற்செயலாய்
சந்தித்து  அரைகுறையாய்
தழுவிக்கொண்டு பிரிந்த
தாகத்தை...

Monday, January 6, 2014

ரக்க்ஷா பந்தன் தினத்தில்
காதலை சொன்ன
ஒரே பெண் நீ தான்...

கல்லூரியில்
உடன் படிக்கும் அத்தனை
பெண்களையும் கட்டாயப்படுத்தி
என் கையில் ராக்கி கட்ட செய்துவிட்டு
நீ விட்ட பெருமூச்சை
இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன்...

முதல் காதல்.

நமது முதல் குழந்தையாக இருக்கிறது
முதல் காதல்,

நம் இரண்டாம் பெற்றோராகவும்   இருக்கிறது
நம் முதல் காதல்!

ஒரே பிரசவத்தில்
இரட்டை ப்பிள்ளை
பெற்ற சந்தோசத்தில் இருக்கிறது
நம் முதல் காதல்.

வாழ்வின் இறுதிநாளில்
எழுதும் கவிதைக்கும்
கருப்பொருளாய் தோன்றி மறைகிறது
நம்


முதல் காதல்.

விழித்துக் கொல்!

தூக்கத்திற்கும் விழிப்புக்கும்
இடையில் இருப்பது
உன் கனவென்றால்...
மயக்கத்தையே பரிசளிப்பது
உன் நனவு...

வாய் நிறைய புன்னகை
வேண்டாம்...
மனம் நிறைய மகிழ்ச்சியை வாரி இறைக்கிறது
உன் அருகாமை...

முத்தங்கள் மட்டும் இல்லை என்றால்
பாலை வன யுத்தங்கள் மட்டுமே
காதலி வரலாறாய் இருக்கும்...

காதலை தைரியமாய்
சொல்லி விட்டேன்...
காமத்தை எந்த மொழியில் சொல்வது...

தவற விட்ட கணங்கள் என்று
என்னை நானும் உன்னை நீயும்
பழித்துக்கொண்டிருக்கிறேன்.

அதற்கு பழிக்கு பழி வாங்கவே
நம்மை பற்றிய பிரமிப்புகள்
அகலும் முன்பாகவே
நம் திருமணத்திற்கு  பிறகு
நம்மிடம் இருந்து
துண்டித்துக்கொள்கிறது
காதல்

ஆதித் திமிர்

காதலிப்பவர்களை பார்த்து
....தித் திமிர் என்று
திட்டுகிறார்கள் பெரியவர்கள்...

அவர்களுக்கு ஒன்றை
சொல்லிக்கொள்கிறேன்
இது ஆதித் திமிர்!

Thursday, January 2, 2014

கண்ணீர் தூக்கம்




பெரிய  சிவப்பு  பாம்பு  ஒன்று
என்னுடன் மணிக்கணக்கில் பேசியது....

வீகாலேண்ட்     ராட்டினக்காரன்
அப்படியே   ஷிப்ட்  ஆகி
என்  வீட்டு   பக்கத்தில்
வியாபாரம்  செய்தான் ....

அதில்  ஆடுவோர்  அனைவருக்கும்
புத்தகம்  ஒன்று இலவசமாக  கொடுத்தான் ....

என்னை ஹீரோவா வச்சி
ஒருத்தர் படமெடுக்கிறார்...
ரஜினியும்  கமலும்
ஷூட்டிங் பார்க்க வந்திருந்தனர்....

ஒருதலை  காதல் எல்லாம்
இருதலை காதலாய்  மாறி
விருப்பம் தெரிவித்தன



ஓடும்  ரயிலில்
விழுந்து   ஆறு   முறை
இறந்து  கிடந்தேன் ....
யாரும்  அழவில்லை  ....
நானும்  சாகவில்லை!!

இறந்து போன என் அப்பாவும்...
பிறந்த உடன் இறந்து போன
என்  பிள்ளையும்
ஒரே நேரத்தில் வந்து என்னை
கட்டிக்கொண்டனர்....

அப்பா   என்று   அலறினேன்
கண்ணீர் வந்தது...
இது மட்டும் நிஜம்
இந்த கனவில்!!