Tuesday, October 20, 2015

தண்ணீர்
இல்லை என்றால்
கண்ணீரும் இருந்திருக்காது
வியர்வையும் இருந்திருக்காது

தாமரை ஆடும் குளமும்
கெண்டை ஓடும் ஆறும்
திமிங்கல சமுத்திரமும்
இருந்திருக்காது

மழையும் கிடையாது
தூவானக் கவிதைகளும்
கிடையாது

பச்சை கிடையாது
பருவப் பயிர்கள் கிடையாது
களையும் கிடையாது

மரங்கள் கிடையாது
அது உங்களிடம் உயிர்ப்பிச்சையும்
கேட்டிருக்காது

இரத்தமும் கிடையாது
இரத்த வெறியும் கிடையாது

குரல்வளை நனைக்கும்
தாகமும் இருக்காது
இரட்டைக்குவளை
வேதனையும் இருக்காது



வாய்க்கால் நீரிலே
வரும் இளநீரும் இருக்காது
வாயக்கரிசி போடும்
கள்ளியும் அரளியும் இருக்காது

Friday, October 16, 2015

யானை

யானை ஒன்று வீதியில் வந்தது...

என்னை
எட்டி மிதித்துக் கொன்றுவிடும்
என்று தான்
நினைத்திருந்தேன்

அருகில் வந்ததும்
வெலவெலத்து தான் போனேன்

என்னிடம் காசு வாங்கிக்கொண்டு
ஆசீர்வாதமும் செய்து
கடந்து போனது.

யானை  கடந்துபோனதும்
நான் கொடுத்த
இரண்டு ரூபாய் நாணயம்
என் உயிரைக் காப்பாற்றியதாய்
பிதற்றிக்கொண்டிருக்கிறேன்

Thursday, June 18, 2015



சலனமின்றி இருக்கிறது
விரல் கொலுசு...

சத்தமிட்டு சிரிக்கிறது
கைக் கொலுசு..

உன் தனித்துவமாய் இருக்கிறது
நிஜக்கொலுசு

Saturday, June 13, 2015

காக்கா முட்டை

  ஒரு வித்யாசமான கதைக்களத்துடன் ஒரு சினிமா வந்துவிட்டால் இந்த ரசிகர்களெல்லாம் அநியாயத்துக்கு ரசனை தர்மம் போதனைகளும் சேர்ந்தே வந்துவிடுகிறது

அழகி வந்தப்ப...ஆட்டோகிராப் வந்தப்ப மக்களுக்கு வந்த மாதிரி ஒரு அலை இப்ப காக்கா முடடைக்கும் வந்திருக்குது..

ஆட்டோகிராப் வந்த நேரம் ஏன் இதுமாதிரி உங்களால எடுக்கமுடியாதான்னு தியேட்டர்லேயே அங்கலாய்ச்சாங்க...

படம் மசாலா மாதிரி இருந்தா தியேட்டருக்கு போகாதீங்கன்னு நீங்களே உங்க நண்பர்கிட்ட சொல்லுங்கன்னு அந்த படம் சம்பந்தப்பட்டவரே சொன்னார்..

அழகி வந்த நேரம்..இது மாதிரி கதை தந்தா நாங்க ஏன் ரசிக்கமாடடேங்றோம்...நீங்க தான் மசாலாவா கொடுத்து எங்கள கெடுத்து வச்சிருக்கீங்கன்னு குறைபட்டுக்கிட்டாங்க..

அப்டின்னா நம்ம ரசனை தரம் இப்ப உயர்ந்துட்டுதா...

ஆட்டோகிராப் பத்தி நடிகர் ராதாரவியிடமும் இதே கேள்வியை கேட்டார்கள்

ஏன் நீங்க மசாலாவாவே போறீங்க..ஆட்டோகிராப் மாதிரி படம் எல்லாரும் எடுத்தால் என்ன.

அதற்கு அவர் சொன்ன விளக்கம் உற்று கவனிக்க வேண்டியது

ஆட்டோகிராப் மாதிரி ஒரு படம் தான் பண்ண முடியும்...வேண்ணா 20 வருசம் கழிச்சி இன்னொரு புது டைப் கதை வரவேற்கப்படும்...

ஆனா...பாட்டு பைட் மசாலான்னு ஒரு வருசத்துல 30 படம பண்ணாலும் அது தான் ஓடும்..

இது சரியா தப்பாங்கறது தனி விசயம்

இதான் இங்க உள்ள நிலைமை...

ஆகவே...ஒரு காக்கா முட்டை நம் ரசனைக்கு சான்றாக எடுத்துக்கொண்டு நம் ரசனை மாறி விட்டதாக சிலாகிப்பது ஒரு வித தோற்ற மயக்கமே



Saturday, March 21, 2015

தற்கொலைக்காரன்

உயரத்திலிருந்து குதிக்கும்
தற்கொலைக்காரன்

கீழ்நோக்கிய பயணத்தின்
எந்த ஒரு கணத்திலேனும
வாழ்வாேம் என்று நினைத்திருந்தால்

அந்த ஒரு மைக்ராேகணம்
அவன் வாழ்தலை புரிந்துகொண்ட
கணமாகிறது.

என்ன பயன்...

அவனுக்கும்
இதை அவனுக்கு சொல்லும் எனக்கும்!

Saturday, March 14, 2015

பேய்












வாழும் மனிதனை விட
வாழ்ந்து மறைந்த  பேய்கள் அதிகம்


வாய்ச்சொல்லில் பரப்பி அச்சுறுத்தும்
மனிதனின் வார்த்தைகளின் நீளத்துக்கும்
அதற்கு அப்பாலும்
வாழ்ந்து கிடக்கின்றன..
பேயின் நினைவுகள்

எல்லா பேய்களுக்கும்
அதிக பட்சம்
இரண்டு தலைமுறை தான்
ஆயுள்

வாழ்ந்து இறந்து பேயான மனிதர்களை விட
வாழ்ந்து கடவுளான மனிதர்கள்
அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள்
தலைமுறை தலைமுறையாய்!!!

Saturday, January 3, 2015

கவிஞன் சாமானியனாகவும்

சாமானியன் கவிஞனாகவும்

திரும்புகின்றனர்

காதல் மேடை ஏறி இறங்கும் போது

உதிரிக்கற்கள்


கல். உளி. சிற்பி தயார்.
இன்னும் சில கணங்களில்
ஒரு சிற்பம் தயாராகிவிடும்,

சிற்பியின் வெற்றிலைக் குதப்பலைக் கூட
தீர்த்தமாய் ஏற்றுக்கொண்டு
இந்த ஒரு சந்தர்பத்தில் மட்டும்
மனிதனை பூஜிக்க இருக்கிறது
ஒரு சிற்பம்.

ஆயுத ஓசையை கலைக்காய் மீட்டும்
இது தான் உண்மையான
சிலை திறப்புவிழா.

கோடி வருஷம் சிற்பத்தை அடைகாத்த
காப்புக் கற்கள்
வெடித்துச் சிதறி, துடித்துக் கதறி
உளிமுனையில் உயிர் நீக்கப் போகின்றன.

நீங்கள் கலைத்தாயின் மைந்தர்கள் என்பது நிஜமெனில்
ஒரு நிமிடமேனும் மெளனியுங்கள்
உதிரிக்கற்களுக்காக..

ஏனெனில்,
அவை காலமெல்லாம் மெளனிக்கப்போகின்றன
உங்களுக்காக