Sunday, June 24, 2012

மெழுகுவர்த்தி திருடர்கள்

பால்யத்தின் நினைவுகளை அசை போடுவதே தனி அலாதி தான்..

கார்த்திகை மாதத்தில் எல்லோர் வீட்டிலும் தீபம் அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள்...கால் சட்டையுடன் நாங்கள் திரியும் பருவத்தில் எங்களுக்கு அன்று தான் நல்ல மெழுகுவர்த்தி வேட்டை... இரவு பத்து மணிக்கு துவங்கும் மெழுகுவர்த்தி வேட்டை...

காற்றில் அணைந்த பாதி மெழுகுவர்த்திகள் எங்களால் சூறையாடப்படும் .எவனாவது கால்சட்டை பை நிறைய மெழுகுவர்த்தி துண்டுகளை காட்டி பெருமிதம் கொண்டால் நெஞ்சு பொறுக்காது; போருக்கு செல்லும் வீரர்கள் போல் புறப்பட்டு விடுவோம் மெழுகுவர்த்தி சேகரிக்க...இல்லை இல்லை திருட..

மெழுகுவர்த்தி வேட்டையின் முக்கியமான இடம் கல்லறையில் திருடுவது தான்...இந்த இடத்தில் வேண்டுமானால் சேகரித்தல் என்று போட்டுக்கொள்ளலாம்..

கார்த்திகை தீப திருநாள் அன்று  கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

கல்லறைக்கு மாலையிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி ஐந்து நிமிடத்தில் அங்கிருந்து திரும்பிவிடுவார்கள்..காற்றும் எங்களுக்கு தோதுவாக ஒன்றிரண்டை விட்டுவிட்டு பிற மெழுகுவர்த்திகளை அணைத்துவிடும் ..

கல்லறையில் மெழுகுவர்த்தி திருடும் போது கல்லறை பற்றிய அச்சம் கொஞ்சமும் இருக்காது...இறுதி யாத்திரை வண்டி போனால் கூட கால் சட்டையை தொப்புளுக்கு மேல் ஏற்றும் பயம் அன்று மட்டும் எங்கோ போய்விடும்..

கால்சட்டை பை மேல் சட்டை பை எல்லாவற்றிலும் மெழுகுவர்த்தி நிரப்பி வீட்டிற்கு கொண்டு வருவோம்...

வீட்டிற்கு வந்த பின் தான் பெண் பிள்ளைகளின் பங்களிப்பு அதில் தொடங்கும்...

அதற்கென்றே வைத்திருக்கும் பழைய ஈய பாத்திரத்தில் மெழுகை காய்ச்சுவாள் அக்கா..

பின் தயாராய் வைத்திருக்கும் பப்பாளி இலை குழாய், தேங்காய் சிரட்டை,  பழைய சைக்கிள் பெல்  இப்படி பல அச்சுகளில்  மெழுகை ஊற்றி புதிய மெழுகுவர்த்தி செய்வாள்..

ஒரு மணி நேர தூக்கத்துக்கு பிறகே  கல்லறை பீதி வரும்...தூக்கம் தொலைந்தே போகும்...எண்டா என் மெழுகுவர்த்தியை திருடுனே என்று கல்லறை பிரேதங்கள் கேட்பது போல் தோன்றும்...

ஒரு வழியாய் கண்ணயர்ந்த அதிகாலை தூக்கத்தையும்  அக்காவே கலைக்கிறாள்..

எழுந்திரிடா..எழுந்திரிடா
என்று எழுப்பி...தினுசு தினுசாய் மெழுகின் வடிவத்தை காட்டி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவாள். நான் திருடிய சேகரித்த மெழுகுவர்த்திகள் புத்தம் புதிய வடிவத்துடன் என் கைகளில் தவழும்...
கல்லறை பீதி காணாமலே போகும் .

1 comment:

  1. இளம்பிராய நினைவுகள் நம்முடன் வாழும் நண்பர்கள் போல..சில சிரிக்கவும்,சில வெறுக்கவும்,சில கற்பிக்கவும் செய்கின்றன..ஆயினும் சிறு வயதில் செய்யும் சிறுசிறு மீறல்களே நம் வடிகாலாக இருந்திருக்கின்றன...இப்பதிவு எனது குழந்தைமையை நினைவுபடுத்துகின்றது..

    ReplyDelete